ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், 4Ever Skin Naturals உடன் முதன்முதல் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், 4Ever Skin Naturals உடன் முதன்முதல் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) இன் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கப் பிரிவான John Keells Research (JKR) ஆனது தனது முதன்முதல் தொழில்நுட்ப உரிம ஒப்பந்தமாக, 2022 மார்ச் 15 அன்று 4Ever Skin Naturals (Pvt) Ltd உடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான கிறிஷான் பாலேந்திரா மற்றும் 4Ever Skin Naturals (Pvt) Ltd இன் ஸ்தாபகரும், தலைவருமான சாந்தனி பண்டார ஆகியோர் முறையே அந்தந்த நிறுவனங்களின் சார்பாக இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கு மட்டுமன்றி இலங்கைக்கும் வர்த்தக ரீதியாக சாத்தியமான அறிவுசார் சொத்துக்களை உருவாக்கும் ஆணையுடன் JKR செயல்பட்டு வருகிறது. மேலும் JKR இன் தலைமை அதிகாரியான கலாநிதி முதித செனரத்-யாப்பா மற்றும் பல்துறை விஞ்ஞானிகளின் அணியுடன் இணைந்து கூட்டுக்கள், எரிசக்தி களஞ்சியப்படுத்தல், உயிர் பொருட்கள் மற்றும் இயந்திர மின்னணுவியல் ஆகிய நான்கு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

4Ever Skin Naturals (Pvt) Ltd ஆனது இலங்கையின் முன்னணி மூலிகை அடிப்படையிலான அழகுசாதன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இது உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளின் நம்பிக்கையை வென்ற அழகு பராமரிப்பு, சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு போன்ற தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றது.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான கிறிஷான் பாலேந்திரா அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “புத்தாக்கம் என்பது குழுமத்தின் முக்கியமான விழுமியங்களில் ஒன்றாகும். இதன் மூலம் எங்களின் அனைத்து வணிகங்களிலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு கூடுதல் மதிப்பை சேர்ப்பிக்க முயல்கிறோம். மீ நுண் (Nano) தொழில்நுட்பத்தின் நன்மைகள் அதன் தற்போதைய பயன்பாடுகளை மிஞ்சும் என்றும், இன்றைய தொழில்நுட்ப பரிமாற்றம் சந்தையில் மிகவும் புத்தாக்கமான மற்றும் நிலைபேறான தயாரிப்புகளுக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

JKR இன் தனியுரிம Silmetic TM தொழில்நுட்பம், மேம்பட்ட பண்புகளுடன் கூடிய சரும பராமரிப்பு தயாரிப்புக்களை உருவாக்க 4Ever ஆல் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும். Silmetic TM என்பது JKR ஆல் உருவாக்கப்பட்டு வர்த்தக முத்திரையிடப்பட்ட வெள்ளி மீ நுண் துகள்களைக் கொண்ட ஒரு அழகுசாதன மற்றும் ஒப்பனை சேர்க்கை ஆகும். உரிமம் பெற்ற ஒப்பனை தயாரிப்பு வரிசையானது 4Ever இன் துணை வர்த்தகநாமமான DermaPRO இன் கீழ் ஆரம்பிக்கப்படும்.

4ever Skin Naturals (Pvt) Ltd இன் ஸ்தாபகரும், தலைவருமான திருமதி. சாந்தனி பண்டார அவர்கள் கூறுகையில், “மீ நுண் வெள்ளி ஆனது ஏனைய மீ நுண் துகள்களிலிருந்து வேறுபட்டது. மேலும் இது பல தசாப்தங்களாக நுகர்வோர் பொருட்கள் உட்பட பல்வேறு பயன்பாடுகளில் அதன் பாவனைக்காக அறியப்படுகிறது. ISO 9001: 2015, cosmetic GMP 22716: 2007, HACCP மற்றும் இலங்கை ஆயுள்வேத தரநிலைகளின்படி, அதிசிறந்த சுகாதார நிலைமைகளின் கீழ், கண்டி பள்ளேகல, முதலீட்டு உற்பத்தி ஊக்குவிப்பு கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள எங்களின் அதி நவீன உற்பத்தித் தொழிற்சாலையில் தனித்துவமான மீ நுண் வெள்ளி தயாரிப்புகளை உருவாக்க ஜோன் கீல்ஸ் உடன் கூட்டு சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

மீ நுண் (நானோ) தொழில்நுட்பம் என்பது விஞ்ஞானத்தில் ஒரு அதிநவீன பகுதியாகும். இதில் வடிவமும் அளவும் நானோ மீட்டர் அளவில் கட்டுப்படுத்தப்படும் பொருட்கள், சாதனங்கள் மற்றும் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, தன்மை, உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவை அடங்கும். நானோ பொருட்களை ஒப்பனை தயாரிப்பு சூத்திரங்களில் சேர்ப்பதன் மூலம், சருமப் பராமரிப்புத் துறையில் புதுமையான நன்மைகளை அறிமுகப்படுத்துகிறது. இது தயாரிப்புகளை சிகிச்சையியல் மற்றும் மூப்படைதலை தடுக்கும் உயர்தர பூச்சு, சுருக்க எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் உருவாக்குகிறது.

Silmetic TM என்பது பொருள் மற்றும் எரிசக்தி பயன்பாடு ஆகிய இரண்டிலும் நிலைபேறான தொழில்நுட்பமாகும், ஏனெனில் Silmetic TM இன் நிமிட அளவுகள் நீண்ட காலத்திற்கு நிலைக்கும் விளைவுகளை வழங்க முடியும். John Keells Research இன் இலக்கானது, இலங்கையில் ஒரு புத்தாக்க சுற்றுச்சூழல் கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில் விஞ்ஞானத்தின் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகும். John Keells Research என்பது, 7 பல்வேறுபட்ட துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வருவதுடன், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) இன் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கப் பிரிவாகும். 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 இற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், LMD சஞ்சிகையால் கடந்த 16 வருடங்களாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக’ தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐநா உலக உடன்படிக்கையின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், JKH ஆனது, ஜோன் கீல்ஸ் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டை கணிசமான அளவில் குறைப்பதில் ஒரு ஊக்கியாக உள்ள சமூக தொழில்முனைவோர் முயற்சியான ‘Plasticcycle’ மூலமாகவும் “எதிர்காலத்திற்காக தேசத்திற்கு வலுவூட்டுதல் என்ற அதன் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு இலக்கினை முன்னெடுத்து வருகின்றது.

Taken from: AdaDerana